வறண்டு கிடக்கும் பெரியகண்மாய்
கடும் வெயில் காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாய பணிகளை தொடங்கிய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம்
கடும் வெயில் காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாய பணிகளை தொடங்கிய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரிய கண்மாய்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவினை விட குறைவாகவே பெய்தது. இதனால் ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டே ரில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகி விட்டன. நெல் கைவிட்டதால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுத்துவிட்டு மீண்டும் உழுது பருத்தி, மிளகாய் உள்ளிட்டவைகளை பயிரிட்டனர்.
மாவட்டத்தில் வைகை தண்ணீர் பாயாத பகுதிகளில்தான் இந்த நிலை இருந்தது. மாறாக வைகை தண்ணீர் பாய்ந்த பகுதிகளில் நல்ல விளைச்சல் ஏற்பட்டது. ஏனெனில் பருவமழைக்கு முன்னதாகவே வைகை தண்ணீர் எடுத்து நீர்நிலைகள் நிரப்பியதாலும், வைகை உபரிநீர் வந்ததாலும், மழை ஓரளவு பெய்ததாலும் நீர்நிலைகள் நிரம்பி விவசாயத்திற்கு கைகொடுத்தது.
சாகுபடி
வைகை அணையில் இருந்து வந்த தண்ணீரை முறையாக அனைத்து கண்மாய்களுக்கும் பாரபட்சமின்றி பகிர்ந்து அளித்ததால் வைகை தண்ணீர் பல ஆண்டுகளாக பாயாத பகுதிகளில் கூட கொண்டு சேர்க்கப்பட்டது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் வைகை தண்ணீர் நிறைந்து முதல்போக சாகுபடி முழுமையடைந்தது. ராமநாதபுரம் பெரிய கண்மாயை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் 2-ம் போக சாகுபடியை மேற்கொண்டனர்.
இதுதவிர, வெள்ளரி, கத்தரி, வெண்டை, பாகற்காய் போன்ற காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்தனர். 2-ம் போக சாகுபடி மற்றும் காய்கறிகள் பயிரிட்டதால் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்த தண்ணீரை நகரில் உள்ள ஊருணிகள், கண்மாய்களில் நிரப்ப விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
வறண்ட கண்மாய்
பெரிய கண்மாயில் அதிகளவில் தண்ணீர் இருந்து வந்த நிலையில் கடும் கோடைவெயில் மற்றும் அதனை தொடர்ந்தும் தணியாத வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் அனைத்தும் வற்றி விட்டது. நீண்ட காலத்திற்கு பின்னர் கடல்போல் காட்சியளித்து வந்த ராமநாதபுரம் பெரியகண்மாய் தற்போது வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கண்மாயை நம்பி நெல்விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தண்ணீர் முழுமையாக வற்றி விட்டதால் வைகை தண்ணீர் வருமா? மழை கைகொடுக்குமா? என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பெரிய கண்மாயின் கொள்ளளவு 618 மில்லியன் கனஅடி ஆகும். இத்தனை நாட்கள் தேங்கியிருந்த தண்ணீர் கடும் கோடை காரணமாக வற்றிவிட்டது. தற்போது 10 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது. அதாவது 1½ சதவீதம் அளவில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.
வைகை தண்ணீரை விவசாயிகளின் தேவைக்கேற்ப மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று திறக்கப்படும் என்று கூறினார்.