எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க துடிக்கிறார்கள்-சேலத்தில், டி.டி.வி.தினகரன் பேச்சு


எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க துடிக்கிறார்கள்-சேலத்தில், டி.டி.வி.தினகரன் பேச்சு
x

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க துடிக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

சேலம்

ஆலோசனை கூட்டம்

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மாதேஸ்வரன் (வடக்கு), சண்முகம் (கிழக்கு), சங்கர் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் ஒருவர் பதவிக்கு வர துடிக்கிறார். ஒருவர் தடுக்க முயற்சி செய்கிறார். அதன்படி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க துடிக்கிறார்கள். அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். உயில் எழுதி வைத்து சென்று உள்ளார். அ.தி.மு.க.வை யார் அழிக்கிறார்கள்? என்று மக்களுக்கு தெரியும். ஓ.பன்னீர்செல்வம் துரோகிகள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு வீழ்ந்து வருகிறார். எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதா கட்டி காத்த அ.தி.மு.க. கட்சி தற்போது மூழ்கும் கப்பலாக உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற செயல்களால் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் தலைகுனிந்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தவறு செய்கிறார்கள்

எடப்பாடி பழனிசாமியின் பினாமிகள் தவறு செய்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களில் 98 சதவீதம் ஆதரவாளர்கள் உள்ளதாக கூறும் எடப்பாடி பழனிசாமி ஏன் பொதுக்குழு கூட்டத்தை உடனடியாக நடத்த முயற்சிக்கிறார். மீண்டும் பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமையாகவோ அல்லது பொதுச்செயலாளராகவோ பதவி ஏற்று குறுக்குவழியில் அமர பார்க்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தான் மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி நகராட்சியில் கூட வெற்றி பெறமுடியவில்லை. ஏனென்றால் அதை விட அதிகளவில் தி.மு.க. செலவு செய்து உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கொடுக்கப்பட்டு உள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

திராவிட மாடல் என்று கூறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார். வரும் காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சி அமைப்போம். தேர்தல் பிரசாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டார்.

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டு உள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். போதை பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க வேண்டும். அ.தி.மு.க. 3-ஆக உடைய வாய்ப்பு இல்லை, ஒன்றாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story