குடியிருப்புகளை கையகப்படுத்தினால் உரிய இழப்பீடுகருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்


குடியிருப்புகளை கையகப்படுத்தினால் உரிய இழப்பீடுகருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
x

கடலோர கிராம இணைப்பு சாலைக்கு மீனவர்கள் குடியிருக்கும் இடங்களை கையகப்படுத்தினால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்,

கடலோர கிராம இணைப்பு சாலைக்கு மீனவர்கள் குடியிருக்கும் இடங்களை கையகப்படுத்தினால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கருத்து கேட்பு கூட்டம்

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்த மீனவர்கள் கருத்து கேட்பு கூட்டம் குளச்சல் மீன் பிடித்துறைமுக மீன் வளத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று மாலையில் நடந்தது. நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார். இதில் உதவி கோட்ட பொறியாளர்கள் ஹெரால்டு ஆன்றனி, விஜயா, பிரவின்குமார், உதவி செயற்பொறியாளர்கள் தனசேகர், ராமச்சந்திரன், அரவிந்த் மற்றும் பல்வேறு மீனவர் கிராமத்தில் இருந்து மீனவர்கள் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் விவரம் வருமாறு:-

உரிய இழப்பீடு வேண்டும்

குமரி கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் டங்ஸ்டன் கூறியதாவது:- இந்த கருத்து கேட்பு கூட்டம் ஒவ்வொரு மீனவர் கிராமங்களிலும் நடத்த வேண்டும். அப்போதுதான் மீனவர்கள் குடியிருக்கும் எந்த இடங்கள் இந்த திட்டத்திற்கு எடுக்கப்படும் என தெரிய வரும்.

தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சில்:- நெடுஞ்சாலை துறை விதி முறைப்படி 7.5 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்க வேண்டும். ஆனால் 5.5 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இடத்திற்கு தகுந்தவாறு 7.5 மீட்டர் அகலத்திற்கு அமைக்க வேண்டும். தற்போது கடலரிப்பு தடுப்பிற்கு அமைக்கப்பட்டுள்ள சாலைகள் உள்ளது. இந்த சாலைகளை நீட்டித்து கூட இணைப்பு சாலை அமைக்கலாம். தலைமுறை தலைமுறையாய் மீனவர்கள் குடியிருக்கும் இடம் எடுக்கப்பட்டால் அதற்குரிய இழப்பீடு தொகையை மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.

விரைவில் நிறைவேற்ற வேண்டும்

நெய்தல் மக்கள் இயக்க செயலாளர் குறும்பனை பெர்லின்:- தற்போது மேற்கு கடற்கரை சாலை குறும்பனையில் இருந்து கடற்கரை கிராமங்களை இணைக்காமல் கருங்கல் வழியாக செல்கிறது. மீனவர்களின் கனவு திட்டமான கடலோர இணைப்பு சாலையை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

குளச்சல் நகராட்சி கவுன்சிலர் ஜாண்சன் (தி.மு.க.):- கடற்கரை ஒழுங்கு முறை மேலாண்மை திட்டம், கடலோர கிராமங்களை இணைக்கும் சாலை திட்டம் இவைகளை தனித்தனியாக தெளிவு படுத்த வேண்டும்.

கோட்ட பொறியாளர்:- கடலோர கிராமங்களை 3 மண்டலமாக பிரித்து மீனவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.


Next Story