முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டி கொலை
வாணியம்பாடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை - மகனை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை - மகனை போலீசார் கைது செய்தனர்.
நிலப்பிரச்சினை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்ற சோழன் (வயது 62), விவசாயி. இவருக்கு நன்னேரி பகுதியில் 3 ஏக்கரில் நிலம் உள்ளது.
இந்த நிலையில் சோழனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (38) என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்ட நிலையில் சோழன், இதுகுறித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்று காலை சோழன் நிலத்திலிருந்து, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
வெட்டிக்கொலை
அப்போது முன்விரோதம் காரணமாக அவரை மகேந்திரனின் 17 வயது மகன் வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சிறுவன் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் முன்பு சரண் அடைந்தான்.
இந்த நிலையில் சோழனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
முற்றுகையிட்டு போராட்டம்
அப்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன் மற்றும் அவரது மகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.