தொடர் மழையாலும், வைகை தண்ணீர் வரத்தாலும் திருப்பரங்குன்றம் தென்கால், நிலையூர் கண்மாய் நீர்மட்டம் உயர்வு
திருப்பரங்குன்றம் தென்கால்கண்மாய் மற்றும் நிலையூர் கண்மாயில் தொடர் மழையாலும், வைகை தண்ணீர் வரத்தாலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் தென்கால்கண்மாய் மற்றும் நிலையூர் கண்மாயில் தொடர் மழையாலும், வைகை தண்ணீர் வரத்தாலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
விவசாயம் பாதிப்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பை-பாஸ் ரோட்டின் கீழ்புறத்தில் தென்கால் கண்மாய் அமைந்து உள்ளது. இந்த கண்மாய்க்கு மறுகால் வசதி இல்லை. இதே சமயம் 2 பெரிய மடைகள் அமைந்து உள்ளது. நிலையூர் கால்வாயின் தென்பகுதியில் அமைந்து உள்ளதால் திருப்பரங்குன்றம் கண்மாய்க்கு தென்கால் கண்மாய் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 700 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்துவந்தனர்.
கனமழை தொடர்ந்து பெய்யாததாலும், விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் விவசாயம் செய்ய முடியாத நிலையில் வாழ்வாதாரம் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
வீட்டுமனை
இதனையொட்டி விவசாயிகள் பலர் நிலங்களை விற்றனர். தற்போது விளைநிலங்கள் வீட்டுமனையாகி குடியிருப்புகளாக உருமாறிவிட்டன. இதற்கிடையே விளைநிலங்களின் பரப்பளவு சுருங்கிவிட்டது. விவசாயமும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்தநிலையிலும் விவசாயமே எங்களது முதுகெலும்பு என்று சில விவசாயிகள் விவசாயம ்செய்து வருகிறார்கள். அவர்களின் எதிர்ப்புக்கு ஏற்ப கடந்த சில நாட்களாக மழை பெய்தது. வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி தண்ணீர் அதிகரித்தது. அதன் பயனாக திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் நிலையூர் கால்வாய் வழியாகதண்ணீர் வரத்து உள்ளது.
கடலாக தென்கால் கண்மாய்
தற்போது தென்கால் கண்மாயை தூரத்தில் நின்று பார்க்கும்போது கடல்போல காட்சி தருவதாக கூறுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 4½ ஏக்கர் பரப்பளவும், 27 அடி ஆழம் கொண்ட நிலையூர் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதுதவிர திருப்பரங்குன்றத்தில் உள்ள பானாங்குளம், ஆரியங்குளம், குறுக்கிட்டான்குளம், செவ்வந்திகுளம் ஆகிய 5 குளங்களும் 100 சதவீதம் கொள்ளளவை எட்டி உள்ளது. இதனையடுத்து விவசாயிகள் முழுவீச்சில் விவசாயபணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல வைகை தண்ணீர் பாசனத்தை சார்ந்த திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமபுறங்களிலும் பெரும்பாலான விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டு உள்ளனர்.