தொடர் விடுமுறை காரணமாக ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்


தொடர் விடுமுறை காரணமாக  ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2022 1:00 AM IST (Updated: 2 Oct 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

அலைமோதிய பயணிகள் கூட்டம்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் சொந்த ஊரில் சென்று கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை மற்றும் வருகிற 5-ந்தேதி விஜயதசமி என்பதால் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை உள்ளது.

இதற்கிடையில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக நேற்று ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் வெளியூர் செல்லும் மக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் ஈரோடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் நேற்று முன்தினம் இரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு பஸ் நிலையத்திலும் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.


Next Story