தேர்தல் வழக்கு காரணமாக திருச்செந்தூர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு
தேர்தல் வழக்கு காரணமாக திருச்செந்தூர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
தேர்தல் வழக்கு காரணமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த திருச்செந்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வு
கடந்த 2016-ம் ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. இந்த குடோன் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான செந்தில்ராஜ், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேர்தல் வழக்கு
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறும் போது, கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து பி.ராம்குமார் ஆதித்தன் கோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 24.6.22 அன்று சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறையை திறந்து ஆய்வு செ்ய தலைமை தேர்தல் அலுவலர் அனுமதி அளித்து உள்ளார்.
அதன்பேரில் இந்த குடோனில் 412 வாக்குப்பதிவு எந்திரம், 400 கட்டுப்பாட்டு கருவிகளும் உள்ளன. இந்த எந்திரங்களில் 15 ஆண்டுகள் முடிவடைந்த எந்திரங்கள் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆகையால் 15 ஆண்டுகள் முடிவடைந்த எந்திரங்கள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு நாளை (புதன்கிழமை), ஏற்கனவே நடந்த முதல் நிலை சரிபார்ப்பின் போது கண்டறியப்பட்ட பழுதடைந்த எந்திரங்களுடன் சேர்த்து, உரிய பாதுகாப்புடன் பெல் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது என்று கூறினார்.