வரத்து அதிகரிப்பால் பழையாறு துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு
வரத்து அதிகரிப்பால் பழையாறு துறைமுகத்தில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.
கொள்ளிடம்:
வரத்து அதிகரிப்பால் பழையாறு துறைமுகத்தில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.
மீன்வரத்து அதிகம்
கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 400 விசைப்படகுகள், 350 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மேலும் பழையாறு துறைமுகத்தில் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில், கடந்த 15-ந் தேதி மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அதனை தொடர்ந்து கடலில் மீன் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீன்களின் விலையும் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
விலை குறைவு
மேலும் மீன்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் மீன்களை வாங்கி சென்றனர். இதுகுறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளர்கள் கூறுகையில், 61 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றோம். இரண்டு நாட்கள் முதல் ஒரு வார காலம் வரை கடலிலேயே தங்கி இருந்து அதிக அளவு மீன்களை பிடித்து துறைமுகத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.
61 நாட்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால், மீன்களின் இனப்பெருக்கம் அதிகமாகி அதிகளவில் மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கடலுக்கு சென்றோம். அதன்படி அதிக அளவு மீன்கள் கிடைத்தது. மேலும் கடந்த ஆண்டை விட அதிகமாகவே கிடைத்தது. மேலும் மீன்கள் குறைந்த விலையில் விற்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.