காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது
காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது
ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது.
தக்காளி -சின்னவெங்காயம்
ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்களும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்கிறார்கள். திண்டுக்கல், தாராபுரம், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா, கிருஷ்ணகிரி, மேட்டுப்பாளையம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
வழக்கமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 100 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த சில வாரங்களாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்தது. இதன் எதிரொலியாக தக்காளி விலை ஒரு கிலோ ரூ.140 வரையும், சின்ன வெங்காயம் ரூ.160 வரையும் விற்பனையானது. இதேபோல் பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட், அவரை போன்ற காய்கறிகளும் ரூ.100-ஐ தாண்டியது. இதனால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது ஈரோடு மார்க்கெட்டுக்கு மீண்டும் காய்கறி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஈரோடு மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 130 டன் காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதன் காரணமாக சில காய்களின் விலை கடந்த வாரத்தை விட குறைந்து விற்பனையானது.
குறிப்பாக கடந்த வாரம் ரூ.110-க்கு விற்பனையான பச்சை மிளகாய் நேற்று ஒரு கிலோ ரூ.60-க்கும், ரூ.160-க்கு விற்பனையான சின்னவெங்கயம் ரூ.120-க்கும், ரூ.110-க்கு விற்பனையான தக்காளி ரூ.90-க்கும் விற்பனையானது. ஈரோடு மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கத்திரிக்காய் -ரூ.60, வெண்டைக்காய் -ரூ.40, முள்ளங்கி -ரூ.20, பாகற்காய் -ரூ.65, பீர்க்கங்காய் -ரூ.45, புடலங்காய் -ரூ.40, சுரைக்காய் -ரூ.20, முருங்கைக்காய் -ரூ.50, அவரைக்காய் -ரூ.120, கேரட் -ரூ.70, பீட்ரூட்-ரூ.60, பீன்ஸ் -ரூ.100, முட்டைகோஸ் -ரூ.25, காலிபிளவர் -ரூ.50, உருளைக்கிழங்கு -ரூ.40, பெரிய வெங்காயம் -ரூ.35, குடைமிளகாய் -ரூ.120, இஞ்சி -ரூ.300.
இதற்கிடையில் ஈரோடு அருகே ஆர்.என்.புதூர் பாலக்காட்டூர் பகுதியில் உள்ள வியாபாரிகள் மைசூர் பகுதியில் இருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து நேற்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்தனர்.