மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் மகளுடன் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் ஈரோடு கலெக்டரிடம் பெண் கோரிக்கை
ஈரோடு கலெக்டரிடம் பெண் கோரிக்கை
மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் மகளுடன் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் பெண் கோரிக்கை மனு கொடுத்தார்.
அரசு பஸ் டிரைவர்
பவானி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண், தனது 14 வயது மகளுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு நேற்று வந்தார். அவர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கோரிக்கை மனு ஒன்றினை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
எனக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனக்கு 14 வயதில் மகள் உள்ளார். எனது கணவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். 2020-ம் ஆண்டு எனது கணவர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அவர் என்னையும், மகளையும் அடித்து உதைத்தார். இதில் படுகாயம் அடைந்ததால் நான் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். ஆனால் எனது கணவரும், குடும்பத்தினரும் எனக்கு உயர் சிகிச்சை அளிக்க விடாமல் என்னை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர்கள் என்னையும், மகளையும் வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள். நான் எனது மகளுடன் கவுந்தப்பாடியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.
தற்கொலைக்கு அனுமதி
இந்தநிலையில் எனது கணவர் எனக்கும், மகளுக்கும் எந்தவொரு உதவியும் செய்வதில்லை. எனது கணவர் தாக்கியதால் என் வயிற்று பகுதியில் பித்தப்பையிலும், குடலிலும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்க ரூ.7 லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். எனது தாய், தந்தையும் இறந்துவிட்டனர். கணவரும், அவரது குடும்பத்தினரும் கைவிட்டு விட்டார்கள். என்னால் சிகிச்சைக்கான பணத்தை திரட்ட முடியாது. எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்கிறார்கள். நான் உயிரிழந்துவிட்டால், எனது மகள் அனாதையாகி விடுவாள். எனவே எங்களது சூழ்நிலையை கருத்தில் கொண்டு என்னையும், மகளையும் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.