வரத்து குறைவால் கடலூரில், பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை ரூ.1,600-க்கு விற்பனை


வரத்து குறைவால்  கடலூரில், பூக்கள் விலை கிடுகிடு உயர்வு  ஒரு கிலோ மல்லிகை ரூ.1,600-க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைவால் கடலூரில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு கடலூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி வந்து பூக்களை மொத்தமாகவும், சில்லரை விலைக்கும் வாங்கி செல்கின்றனர். இதற்காக கடலூர் உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

வரத்து குறைவு

இந்த நிலையில் மல்லிகை பூவுக்கான சீசன் முடிய உள்ளதாலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக காக்கட்டான் உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் கடலூர் பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ, காக்கட்டான் உள்ளிட்ட பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

இதன் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.700-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.1,600-க்கு விற்பனையானது. மேலும் ரூ.400-க்கு விற்பனையான அரும்பு ரூ.1,200-க்கும், ரூ.250-க்கு விற்பனையான காக்கட்டான் பூ ரூ.800-க்கும், ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மொத்தமாக வாங்க முடியாத பொதுமக்கள் சில்லரை விலைக்கு போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றதை காண முடிந்தது.


Next Story