"பிரசவத்தின்போது டாக்டர்கள் அலட்சியத்தால் குழந்தை, கர்ப்பப்பையை இழந்துவிட்டேன்" - மதுரை ஐகோர்ட்டில் பெண் தொடர்ந்த வழக்கில் உருக்கமான தகவல்கள்


பிரசவத்தின்போது டாக்டர்கள் அலட்சியத்தால் குழந்தை, கர்ப்பப்பையை இழந்துவிட்டேன் - மதுரை ஐகோர்ட்டில் பெண் தொடர்ந்த  வழக்கில் உருக்கமான தகவல்கள்
x

பிரசவத்தின்போது டாக்டர்கள் அலட்சியத்தால் என் குழந்தையையும், கர்ப்பப்பையையும் இழந்துவிட்டேன் என்று பெண் தொடர்ந்த வழக்கில் உருக்கமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை


பிரசவத்தின்போது டாக்டர்கள் அலட்சியத்தால் என் குழந்தையையும், கர்ப்பப்பையையும் இழந்துவிட்டேன் என்று பெண் தொடர்ந்த வழக்கில் உருக்கமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பிரசவத்திற்காக அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, தென்னம்பாடி பகுதியைச் சேர்ந்த நதியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த ஆண்டு மார்ச் மாதம் எனக்கு திருமணம் நடந்தது. பின்னர் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் நீர்பழனி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான பரிசோதனை செய்து வந்தேன். ஆனால் அங்கு எனது ஆரோக்கியம் குறித்தும் குழந்தையின் வளர்ச்சி தொடர்பாகவும் எந்த அறிவுறுத்தலையும் எனக்கோ, குடும்பத்தினருக்கோ வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர், என்னை பரிசோதித்துவிட்டு, சுகப்பிரசவம் ஆக வாய்ப்பில்லை எறு தெரிவித்தார். என் கணவர் நடத்திவரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றால் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார். அதற்கு நாங்கள் மறுத்ததால், எங்களை கடுமையாக திட்டினார்.

குழந்தை இறப்பு

இதற்கிடையே அன்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு, கடுமையான போராட்டத்திற்கு பின்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டது. அழுகையும் இல்லை. பிரசவத்தின்போது டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தையின் தலையில் பாதிப்பு ஏற்பட்டது.

எனது கருப்பையிலும் பாதிப்பு ஏற்பட்டது. எனது குழந்தை அசைவற்ற நிலையில் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது.

இழப்பீடு

மேலும் எனக்கு தொடர்ச்சியாக வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக என்னையும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு என்னை பரிசோதித்த டாக்டர்கள், நான் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் எனது கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதனால் எனது கர்ப்பப்பை அகற்றப்பட்டது. மணப்பாறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், உதவியாளர்களின் அலட்சியப் போக்கால் எனது குழந்தை மற்றும் எனது கர்ப்பப்பையை இழந்து உள்ளேன். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு குறித்து தமிழக உள்துறைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், திருச்சி அரசு ஆஸ்பத்திரி டீன் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story