பொது நடைபாதை பிரச்சினை காரணமாக தம்பதி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு


பொது நடைபாதை பிரச்சினை காரணமாக தம்பதி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x

பொது நடைபாதை பிரச்சினை காரணமாக தம்பதி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ஈரோடு

பொது நடைபாதை பிரச்சினை காரணமாக தம்பதி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

முன் விரோதம்

கணபதிபாளையம் நால்ரோடு அருகே உள்ள சாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 63). இவருடைய மனைவி கல்யாணி (53). இவர்களுடைய மகன் தரணிதரன் (30).

பழனிச்சாமியின் உறவினர் பிரகாஷ் (45). பழனிச்சாமி மற்றும் பிரகாசுக்கு சொந்தமான விவசாய நிலம் அந்த பகுதியில் உள்ளது. இதில் 2 பேருக்கும் பொது நடைபாதை ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடைபாதை தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

அரிவாளால் வெட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷின் நண்பர் ஒருவருக்கு வீடு கட்ட அந்த பாதை வழியாக லாரியில் மணல் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது லாரியை பழனிச்சாமி குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியதுடன், இந்த வழியாக செல்லக்கூடாது என்று கூறி உள்ளனர்.

இதனால் பழனிச்சாமி குடும்பத்தினருக்கும், பிரகாசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கி கொண்டனர். மேலும் பிரகாஷ் அரிவாளால் பழனிச்சாமி, கல்யாணி, தரணிதரனை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் கணவன், மனைவி, அவர்களுடைய மகன் காயம் அடைந்தனர். மேலும் பழனிச்சாமி குடும்பத்தினர் கட்டையால் தாக்கியதில் பிரகாசும் காயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story