கடலூர் மாவட்டத்தில் மின் மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய வீடுகள் கட்டியும் இருளில் வாழும் மக்கள் பதிவு செய்து பல மாதங்களாக காத்திருப்பதாக புலம்பல்


கடலூர் மாவட்டத்தில் மின் மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய வீடுகள் கட்டியும் இருளில் வாழும் மக்கள் பதிவு செய்து பல மாதங்களாக காத்திருப்பதாக புலம்பல்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் மின் மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய வீடுகள் கட்டியும் மக்கள் இருளில் வாழ்கின்றனர்.

கடலூர்

இன்றைய நவீன வாழ்க்கையில் மின்சாரம் இன்றியமையாததாக உள்ளது. மின்சாரம் இன்றி உலகம் இயங்க முடியாத அளவிற்கு, அது மனித வாழ்க்கையுடன் இரண்டற கலந்து விட்டது. வீடு முதல் நாடு வரை அனைத்தின் இயக்கத்திற்கும் மின்சாரம் இன்றியமையாததாக மாறியுள்ளது. இந்த மின்சாரத்தின் மூலம் மக்கள் அடையும் பயனானது எண்ணிலடங்காதவை. அவை நமக்கு தருகின்ற நன்மைகளும், வசதிகளும் ஏராளம்.

வாழவே முடியாது

அதாவது இன்றைய காலத்தில் சிறிது நேரம் கூட மின்சாரம் இல்லாமல் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்த சுட்டெரிக்கும் கோடை வெயிலில் மின்சாரம் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான். தற்போது மின்சார பயன்பாடு அதிகரித்து வருவதாலும், மின்சார உபகரணங்களின் தேவை அதிகரித்து வருவதாலும் இவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்த தேவையை நிறைவு செய்ய என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் வீட்டு உபயோக மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடு தீர்க்கப்படாத குறையாகவே உள்ளது. கடந்த பல மாதங்களாக புதிய மின் இணைப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை. மின் மீட்டர் சப்ளை இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் மின் மீட்டர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

தோராயமாக வசூலிப்பு

அதாவது புதிதாக வீடுகட்டுவோர், இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும்போது, மின் மீட்டர் இல்லாததால் மின்இணைப்பு உடனடியாக வழங்கப்படவில்லை. அதுபோல் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள மின் மீட்டர் பழுதடைந்தால் சில இடங்களில் உடனடியாக மாற்றிதருவது கிடையாது. அதற்கு பதிலாக கடந்தமுறை எந்த கட்டணம் வசூலிக்கப்பட்டதோ, அதே தொகையே தோராயமாக தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டுக்கு பின்னர் புதிய மின்சார எலக்ட்ரானிக் மீட்டர் முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் பழைய மீட்டர்களை மின்சார வாரியமே மாற்றி, புதிய எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தியது. இந்த எலக்ட்ரானிக் மீட்டர் தற்போது கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது மாநிலம் முழுவதுமே தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் தனியார் மின் மீட்டரை வாங்கி பொருத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் தனியார் மின் மீட்டரை ஆய்வு செய்து, உரிய விதிகளின்படி சரியாக உள்ளது என்று சான்றளித்த பிறகு தனியார் மின்மீட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருந்தது.

மக்கள் வேதனை

அந்த நடைமுறையை முறையாக அமல்படுத்தினால்கூட தற்போதைய மின் மீட்டர் தட்டுப்பாட்டினை சரிசெய்யலாம். ஒட்டுமொத்தமாக மின்மீட்டர் தட்டுப்பாடு ஏற்படக்காரணம் கடந்த பல மாதங்களாக சப்ளை இல்லாததே என்று ஒரு சில மின்வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பணம் கட்டி, மின் இணைப்பு கேட்டு பல மாதங்களாக காத்திருக்கும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். அனைவருக்கும் உடனடி மின் இணைப்பு என்ற கொள்கையுடன் செயல்படுவதாக கூறிவரும் நிலையில் மின்மீட்டர் சப்ளை இல்லாமல் இருப்பது மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கூட பெரும்பாலான விவசாயிகள், மாவட்டத்தில் மின் மீட்டர் தட்டுப்பாடு உள்ளதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

இருளில் வாழும் நிலை

கடலூர் அபிநயா: கடலூரில் புதிதாக வீடு, கடைகள் கட்டியுள்ள பலர் புதிய மின் மீட்டர் கேட்டு விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும், இதுவரை அவர்களுக்கு மின் மீட்டர் வழங்கப்படவில்லை. அதேபோல் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் எனது உறவினர் புதிதாக வீடு கட்டி 8 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அவர் புதிய மின் மீட்டர் கேட்டு வைப்புத்தொகை செலுத்தி 7 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை மின் அளவீடு மீட்டர் அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று கேட்டாலும், எங்களுக்கு உயர் அதிகாரிகள் அனுப்பி வைத்ததும், கொடுத்து விடுகிறோம் என்று மட்டுமே பதில் கூறுகிறார்கள். இதனால் பலர் பல்வேறு கனவுகளுடன் புதிய வீடுகள் கட்டியும், இருளில் வாழும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். எனவே விண்ணப்பித்த அனைவருக்கும் தடையின்றி மின் மீட்டர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமான பணி பாதிப்பு

விருத்தாசலம் ராணி: புதிய மீன் மீட்டர் பொருத்த மின்வாரிய அலுவலகத்தில் கடிதம் எழுதி கொடுத்தாலும் ஒரு மாதம், 2 மாதம், 3 மாதமாகியும் மீட்டர் வருவதில்லை. இதுபற்றி கேட்டால் மின்மீட்டர் தட்டுப்பாடு, நாங்கள் என்ன செய்வோம் என்று கடமையை தட்டிக்கழிக்கின்றனர். அப்படியே மின் மீட்டர்கள் வந்தாலும் ஒர்க் ஆர்டர் வரவில்லை, ஆட்கள் இல்லை என்று காரணங்களை சொல்லி தப்பிக்கின்றனர். அவர்கள் மீது, அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் புதிதாக வீடு, கடைகள் கட்டியுள்ளவர்கள் அருகில் வசிப்பவர்களிடம் மின் மீட்டர் கிடைக்கும் வரை உங்கள் வீடுகளில் இருந்து மின் இணைப்பு கொடுங்கள் என்று கேட்டால், மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறி, மின் இணைப்பு கொடுக்க மறுத்து விடுகின்றனர். மேலும் மின் மீட்டர் தட்டுப்பாடால் கட்டுமான பணிகளும் பாதிக்கப்படுகிறது. எனவே விண்ணப்பித்தவர்களுக்கு மின் மீட்டர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அக்னி நட்சத்திரம்

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் மீட்டர் ஒதுக்கீடு கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் வந்துவிடும். பதிவு செய்து காத்திருக்கும் முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதே பதிலைத்தான் கடந்த பல மாதங்களாக மின் இணைப்பு வேண்டி காத்திருப்பவர்களுக்கு மின் வாரியத்தினர் தெரிவிப்பதாக கூறி மக்கள் புலம்புகின்றனர். எனவே இந்த மின் மீட்டர் தட்டுப்பாட்டினை உடனடியாக போக்கி, அக்னி நட்சத்திர வெயிலுக்கு முன்னதாக மின் இணைப்பு வழங்கி மக்களின் மனதை குளிர செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story