தமிழகத்தில் விஷக்காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்


தமிழகத்தில் விஷக்காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
x

தமிழகத்தில் விஷக்காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவி வரும் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. குறிப்பாகக் குழந்தைகளிடத்தில் கடுமையான காய்ச்சல் பரவி வருவதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரபடுத்தாமல், காய்ச்சல் வேகமாகப் பரவவில்லை என்று கூறி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அணுகுமுறை மிகத்தவறானது. குழந்தைகள் உயிர் பறிபோனாலும் பரவாயில்லை, 'திராவிட மாடல்' ஆட்சிக்கு எவ்வித களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று ஆட்சியாளர்கள் நினைப்பது கொடுங்கோன்மை மனப்பான்மையாகும்.

எனவே, தமிழகத்தில் பரவி வரும் விஷக் காய்ச்சலை கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக விடுமுறை அளிப்பதோடு, சிறப்பு டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்து, பெற்றோர்களின் அச்சத்தைத் தீர்க்கும் விதமான பாதுகாப்பு விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும் உடனடியாக வெளியிட வேண்டும்.

மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழக கிராமங்கள் தோறும் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story