பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நேற்று காலை பழனிக்கு வருகை தந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த அவர், பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், உச்சிக்கால பூஜையில் பங்கேற்று வைதீகாள் அலங்காரத்தில் முருக பெருமானை தரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து மலைக்கோவிலில் உள்ள போகர் சன்னதிக்கு சென்று துர்கா ஸ்டாலின் வழிபட்டார். அதன்பிறகு மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்து கொடிமரத்தை தரிசித்தார். இதைத்தொடர்ந்து ரோப்கார் மூலம் அடிவாரம் வந்த அவர் கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மனைவி மெர்சி செந்தில்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினை, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் வரவேற்றனர்.