முத்தையாபுரம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியின் போது மண்ணில் புதைந்த வடமாநில தொழிலாளர்கள்3 பேர் உயிருடன் மீட்பு
முத்தையாபுரம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியின் போது மண்ணில் புதைந்த வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியின் போது மண்ணில் புதைந்த வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பஜார் பகுதியில் ஐ.ஓ.சி.எல். சார்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலையில் வழக்கம் போல் தோண்டப்பட்ட பள்ளத்தில் 2 குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து பள்ளத்திற்குள் விழுந்ததில் 3 தொழிலாளர்களும் புதைந்தனர்.
மீட்கப்பட்டனர்
இதுகுறித்து தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் அக்கம் பக்கத்தினர் முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த முத்தையாபுரம் போலீசாரும், சக தொழிலாளர்களும் பள்ளத்தில் சரிந்துவிழுந்த மண்ணை விரைவாக அகற்றி 3 தொழிலாளர்களையும் உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த 3பேரும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.