போக்குவரத்து விதி மீறியவர்களுக்கு அபராதம் விதித்தபோலீஸ்காரரிடம் இ-செலான் கருவியை பறித்து சென்ற மர்மநபர்கள்திண்டிவனம் அருகே பரபரப்பு
திண்டிவனம் அருகே போக்குவரத்து விதி மீறியவர்களிடம் அபராதம் விதித்த போலீஸ்காரரிடம் இருந்த இ-செலான் கருவியை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூர் உள்ளது. இங்கு புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். மேலும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான வழக்குகளை பதிவு செய்யும் இ-செலான் கருவி மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் கிளியனூர் போலீஸ்காரர்கள் திருஞானம், கார்த்தி ஆகியோர் சோதனை சாவடியில் பணியில் இருந்தனர். அப்போது, போக்குவரத்து விதி மீறியவர்களிடம் இ-செலான் கருவி மூலம் அபராதம் விதித்துக்கொண்டிருந்தனர்.
இ-செலான் கருவி பறிப்பு
அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் வந்த 2 பேரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதை பார்த்த போலீஸ்காரர்கள், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். உடனே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர், வாகனத்தின் வேகத்தை குறைத்து சாலையோரத்தில் நிறுத்துவது போன்று வந்தார். அப்போது அவர்கள், திடீரென திருஞானம் கையில் வைத்திருந்த இ-செலான் கருவியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இதனால் போலீஸ்காரர்கள் இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துபோய் நின்றனர். இது பற்றி அவா்கள், தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அடுத்தடுத்த போலீஸ் நிலையங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஆனால் இ-செலான் கருவியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் சிக்கவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் 2 மர்மநபர்கள், இ-செலான் கருவியை பறித்த காட்சி பதிவாகி இருந்தது. இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால், அந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண் தெளிவாக தெரிந்தது. அந்த எண்ணை வைத்து அவர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.