சோளம், கம்பு பயிரிட்டு விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்


சோளம், கம்பு பயிரிட்டு விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்
x

விவசாயிகள் சிறுதானியங்களான சோளம், கம்பு பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் என்று வேளாண்மை விதை சான்று உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

விவசாயிகள் சிறுதானியங்களான சோளம், கம்பு பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் என்று வேளாண்மை விதை சான்று உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட வேளாண்மை விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் மதுரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறுதானியங்கள்

அதிக தண்ணீர் தேவை உள்ள நெல், கரும்பு மற்றும் வாழை பயிர்களை சாகுபடி செய்வதை விட குறைந்த நீர் தேவை, குறைந்த வயதுடைய சந்தையில் விற்பனை தேவை அதிகமுள்ள, நுகர்வோரின் விருப்பத்திற்கேற்ற சிறுதானியங்களான சோளம், கம்பு பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது. புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

தரமான விதை உற்பத்தி செய்து மற்ற விவசாயிகளுக்கு வழங்கிட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் விதைப்பண்ணை அமைக்கலாம்.

மகசூல்

சோளத்தில் புதிய ரகமான கோ-32 தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்ற ரகம். 105 நாள் வயதுடையது. இறவையில் தானியமாக 3000 கிலோவும், மானாவாரியில் 2500 கிலோவும் மகசூல் கிடைக்கிறது. குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. அடிச்சாம்பல் மற்றும் கதிர் பூசனத்திற்கும் மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. தானியம் மஞ்சள் கலந்த வெள்ளை நிறம் கொண்டது. அதிக புரத சத்தும் அதிக நார்ச்சத்தும் கொண்டது.

சத்து பற்றாக்குறை நீக்குவதற்காக கம்பு பயிரில் இக்ரிசாட் உயிர் வலுவூட்டல் ரகமான தனசக்தி நல்ல மகசூல் தருகிறது. அந்த ரகத்தில் ஒரு கிலோவில் இரும்பு சத்து 71 மல்லிகிராம் மற்றும் துத்தநாகம் 41 கிராம் உள்ளது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story