நள்ளிரவில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகையையொட்டி குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
நாகர்கோவில்:
ஈஸ்டர் பண்டிகையையொட்டி குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சிறப்பு பிரார்த்தனை
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் முதல் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இத்தகைய தினம் கிறிஸ்தவர்களுக்கு முக்கிய நாளாகும்.
இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
சவேரியார் ஆலயம்
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நேற்று இரவு 10.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஆயர் நசரேன் சூசை மெழுகுவர்த்தி ஏந்தியபடி திருப்பலியை நிறைவேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இயேசு வாழ்த்து பாடினர்.
இதே போல குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.