ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்


ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
x
தினத்தந்தி 22 May 2023 12:30 AM IST (Updated: 22 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே சேஷமூலை ஊராட்சி பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாகப்பட்டினம்

திருமருகல் அருகே சேஷமூலை ஊராட்சி பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே சேஷமூலை ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாலை ஓரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு மின்கம்பத்தில் இருந்து மற்றொரு மின்கம்பத்திற்கு செல்லும் மின்கம்பிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்கிறது.

இதனால் அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மின்கம்பிகள் மேலே உரசி ஏதேனும் விபத்துகள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

காரைக்கால் பஸ்

மேலும் சேஷமூலை வழியாக காரைக்காலுக்கு செல்லும் பஸ் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் மின்கம்பிகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு பின்னர் அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பஸ் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. காரைக்காலுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், அரசு அலுவலர்கள்உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.



Next Story