மின்சார ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


மின்சார ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x

உடுமலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்


உடுமலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், கணினி கடன் ஆகியவற்றை வழங்குவதை அரசு ரத்து செய்துள்ளது. அந்த கடன்களை மீண்டும் வழங்க வேண்டும். இதுவரை மின்சார வாரியமே வழங்கி வந்த பஞ்சப்படி உயர்வை, இனிமேல் பஞ்சப்படி உயர்வுக்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற உத்திரவை ரத்து செய்ய வேண்டும்.

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் வெளியாட்களை அனுமதிப்பதை ரத்து செய்து, நிரந்தரமாக பணியாட்களை பணியமர்த்த வேண்டும். மின்சார வாரியத்தில் ஒரு புதிய பதவியை உருவாக்கும் போது, ஏற்கனவே இருக்கும் பதவியை விட்டுத்தர வேண்டும் என்ற உத்திரவை ரத்து செய்ய வேண்டும். அதன்படி 12.4.2022-ம் தேதியிட்ட மின்சார வாரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தி வருகிறது.

காத்திருப்பு போராட்டம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில், திருப்பூர் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் உடுமலை பகுதியின் ஒருங்கிணைப்பாளர் பி.மாரிமுத்து தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் உடுமலை, பொள்ளாச்சி மற்றும் அங்கலக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் பணியாற்றும், மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பணியிடங்களுக்கு செல்லாமல் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் எல்.பி.எப்., பி.எம்.எஸ். மற்றும் என்ஜினியரிங் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் வழக்கம் போல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.


Related Tags :
Next Story