பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 குறைந்தது


பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 குறைந்தது
x

பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலியாக தங்கம் விலை பவுனுக்கு நேற்று ரூ.760 குறைந்து, ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 920-க்கு விற்பனை ஆனது.

சென்னை,

தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டுவருகிறது. கடந்த 2-ந்தேதி விலை அதிகரித்து, ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து ரூ.38 ஆயிரம் என்ற விலையிலேயே நீடித்துவந்தது. உயர்வதும் தாழ்வதுமாக இருந்த தங்கம் விலையில், கடந்த 12, 13-ந்தேதிகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென்று சரிந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 835-க்கும், ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.95-ம், பவுனுக்கு ரூ.760-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 740-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது.

காரணம் என்ன?

தங்கம் விலை திடீர் சரிவுக்கான காரணம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, 'உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துவருவதாலும், மத்திய வங்கியில் (பெடரல் வங்கி) தொழில்துறை சார்ந்த குறியீடுகள், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த குறியீடுகள் மீது பாதகமான சூழ்நிலையில் அறிவிப்புகள் வர இருப்பதாலும் அதன் தாக்கம் அனைத்தும் தங்கத்தின் மீது திரும்பி இருக்கிறது. இதனாலேயே அதன் விலை சரிந்துள்ளது. இம்மாத இறுதி வரையில் இதுபோன்ற ஏற்ற இறக்கம் என்பது பெரிய அளவில் இருக்கும்' என்றார்.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக குறைந்து இருந்தது. நேற்று கிராமுக்கு 1 ரூபாய் 30 காசும், கிலோவுக்கு ரூ.1,300-ம் சரிந்து ஒரு கிராம் ரூ.66-க்கும், ஒரு கிலோ ரூ.66 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story