கொரோனா பரவல் எதிரொலி:முகக்கவசம் அணிந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்கள்


கொரோனா பரவல் எதிரொலி:முகக்கவசம் அணிந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்கள்
x

கொரோனா பரவல் காரணமாக ரசிகா்கள் முகக்கவசம் அணிந்து தியேட்டருக்கு வந்தனா்.

ஈரோடு

கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் தியேட்டருக்கு முகக்கவசம் அணிந்து வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தற்போது தினமும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கும், ஈரோடு மாவட்டத்தில் 5 முதல் 8 பேர் வரையும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ள சுகாதார துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிக்க தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுபோல் சோப்புகளை கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும், மக்கள் கூடும் இடங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

உத்தரவு

இதற்கிடையில் முதல் கட்டமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள், நோயாளிகளுடன் வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து கோர்ட்டுகளுக்கு வரும் நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு சம்பந்தமாக வரும் போலீசார், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

முகக்கவசம் அணிந்து தியேட்டருக்கு...

இந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.

இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் பார்க்க வரும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. இதனால் பெரும்பாலான ரசிகர்கள் முகக்கவசம் அணிந்து படம் பார்க்க வந்தனர். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு தியேட்டர் நிர்வாகம் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டது.


Next Story