நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில்  வெள்ள பாதிப்பை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை  எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

நாமக்கல்

குமாரபாளையம்:

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

நிவாரண உதவிகள்

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி காவிரி கரையோர பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த 270 குடும்பங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் திருமண மண்டபங்களில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக நேற்று முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குமாரபாளையம் வந்தார்.

அவருக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், டாக்டர் சரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், பொன்.சரஸ்வதி, நகர செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் கலைமகள் வீதி ஆற்றோர பகுதிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி வெள்ளம் புகுந்த வீடுகளை பார்வையிட்டார். பின்னர் ஜே.கே.கே.நடராஜா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுகளையும் வழங்கினார்.

மருத்துவ வசதிகள் இல்லை

இதையடுத்து பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதால் பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோரத்தில் வசித்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முகாம்களில் சரியான மருத்துவ வசதிகள் இல்லை. கொள்ளிடம் அருகே சுமார் 300 ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. அ.தி.மு.க. அரசு மக்களுக்கு துன்பம் ஏற்படும்போது அவர்களை மீட்டெடுத்து தேவையான உதவியை வழங்கியது. ஆனால் இந்த அரசு அதை செய்யவில்லை.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேமிக்க அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.7½ கோடியில் கதவணை கட்டப்பட்டது. இந்த அரசு கதவணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. இதேபோன்று அத்திக்கடவு- அவினாசி திட்டம் கடந்த மார்ச் மாதம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் தி.மு.க. அரசின் மெத்தனம் காரணமாக இந்த திட்டம் காலதாமதம் ஆகிறது. தி.மு.க. அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். பயிர் சேதம் குறித்து அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story