அ.தி.மு.க.பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு


அ.தி.மு.க.பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 28 March 2023 11:05 AM IST (Updated: 28 March 2023 4:44 PM IST)
t-max-icont-min-icon

சென்னை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வெளியானது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்" என அறிவித்த நீதிமன்றம் பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி அளித்தார்.

எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திள்ளதால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.அ.தி.மு.க. அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்

அ.தி.மு.க. தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.


அ.தி.மு.க.வின் அதிகாரம் மிக்க பதவி 7-வது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

1972-ம் ஆண்டு அ.தி.மு. க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். கட்சியின் நிறுவன தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார்.

1978-ம் ஆண்டு வரையில் எம்.ஜி.ஆர். வசமே இருந்த இந்த பதவியில் பின்னர் நாவலர் நெடுஞ்செழியன் அமர்ந்தார். 2 ஆண்டுகள் அவர் இந்த பொறுப்பில் இருந்தார். இவரை தொடர்ந்து 3-வது பொதுச்செயலாளராக ப.உ.சண்முகம் 4½ ஆண்டுகள் வரையில் இருந்தார். அவரை தொடர்ந்து ராகவானந்தம் 1½ ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவியை வகித்தார்.

இதையடுத்து மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். மறையும் வரை அந்த பொறுப்பில் இருந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 1989-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா அமர்ந்தார். 27 ஆண்டுகள் 300 நாட்கள் என அதிகாரம் மிக்க இந்த பதவியை ஜெயலலிதா தனது ஆளுமையால் அலங்கரித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா 48 நாட்கள் மட்டுமே பொதுச்செயலாளராக இருந்தார்.

இன்று 7-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் இறுதியாக பொதுச்செயலாளரே கையெழுத்திட வேண்டும் என்பது அ.தி.மு.க. விதிகளில் முக்கியமானதாக இருந்து வருகிறது.


Next Story