மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து


மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
x

கோப்புப்படம் 

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

தற்போதைய நிலையில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்பட 5 பேர் நியமன எம்.பி.க்களாக உள்ளனர். மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு எம்.பி.க்களை நியமனம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

இதனை தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது. இசைத்துறையில் அவர் செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் பொருட்டு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறியதாவது;

"உலக முழுவதும் ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து, இசைஞானி என்று அன்புடன் அழைக்கப்படும் இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்". இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.


Next Story