அ.தி.மு.க. ஆட்சியிலும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்தது:முதல்-அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லைஅமைச்சர் பொன்முடி பேட்டி


அ.தி.மு.க. ஆட்சியிலும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்தது:முதல்-அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லைஅமைச்சர் பொன்முடி பேட்டி
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியிலும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்து, நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதல்-அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

விழுப்புரம்


விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மரக்காணம் சம்பவத்தை வைத்து எல்லோரும் அரசியல் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் இதனை அரசியலாக்க விரும்பவில்லை. கள்ளச்சாராய உயிரிழப்புகள் காரணமாக தமிழக முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். அவர்களது ஆட்சிக்காலத்திலும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

கடந்த ஆட்சியிலும் நிகழ்ந்த மரணங்கள்

கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்க முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறார். 10-9-2001-ல் சென்னை அம்பத்தூரில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தபோது 6.10.2001-ல் கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

2018, டிசம்பர் 5-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் 8 பேரும், அதைத் தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூரில் 7 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கிறனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த காலத்திலும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

குட்கா விற்பனை

அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா, போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகக்கூறி அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் குட்கா பொருட்களை காண்பித்தார். இதைத்தொடர்ந்து 10 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா வியாபாரி மாதவராவிடம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.215 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் அப்போதைய அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் ஆட்சியில் கள்ளச்சாராயம், குட்கா விற்பனை நடந்துள்ளது.

79 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தமிழக முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 2 ஆண்டுகளில் 56 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகளில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க, தனியாக போலீஸ் அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 78 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,077 இருசக்கர வாகனங்களும், 67 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராய வியாபாரிகள் 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாராக இருந்தாலும் நடவடிக்கை

இவ்வளவு செய்திருக்கிற முதல்-அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?

கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் எவ்வித வேறு கருத்தும் இல்லை. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story