கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு


கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
x

கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக 10 பக்க புகார் மனுவை அளித்தார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை, தமிழக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் சந்தித்தார்.

அப்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, போதை கலாசாரம் அதிகரித்து உள்ளது மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் தொடர்பாக 10 பக்கங்கள் அடங்கிய மனு ஒன்றை கவர்னர் ஆர்.என்.ரவியிடம், எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நடைபெற்றது. பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களாக சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. கடந்த அக்டோபர் 23-ந் தேதி கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அக்டோபர் 18-ந்தேதியே மத்திய அரசின் உளவு அமைப்பு தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாநில அரசுக்கு தெரிவித்து உள்ளது.

ஆனால், தமிழக உளவுத்துறை, காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காததால் சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தின் மூலம், இந்த அரசு திறமைற்ற அரசு என்பது நிரூபணமாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் மாணவி மர்மச்சாவு குறித்து பெற்றோர் முறையாக புகார் தந்தும் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரிக்கவில்லை. உளவுத்துறை முறையாக செயல்பட்டிருந்தால் மக்களிடம் கொந்தளிப்பு, வன்முறை நடந்து பள்ளி தீக்கிரையாகி இருக்காது. இதற்கு முதல்-அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்களிடம் போதைப்பழக்கம்

தமிழகத்தில் மாணவர்களிடம் போதைப்பழக்கம் அதிகரித்து உள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. இதுதவிர, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் அதிகரித்துள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மருந்து வாங்குவதிலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது. உள்ளாட்சி பணிகளுக்கான நிதி மத்திய அரசு மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது. ஒரு திட்டத்தை நிறைவேற்றிய பிறகு மீதி இருக்கும் உபரி நிதியை பிற பணிகளுக்கு உள்ளாட்சியில் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த உபரி நிதியை தமிழக அரசின் செலவுக்காக அனுப்பி வைக்குமாறு உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை மாநில அரசு பறிப்பதாகும்.

பேனரில் மெகா ஊழல்

உள்ளாட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கும் வகையிலான விளம்பர பேனர் அச்சடிப்பதில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரு பேனரை அச்சடிக்க ரூ.350 செலவாகும். ஆனால் ஒரு பேனருக்கு 7 ஆயிரத்து 906 ரூபாய் வீதம் தமிழகம் முழுவதும் பேனர் அடிக்க குறிப்பிட்ட ஒரே ஒப்பந்ததாரருக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது.

மது ஆலைகளில் இருந்து, கலால் வரி செலுத்தாமலே தமிழகத்தில் மது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுபானங்களில் மெகா ஊழல் நடக்கிறது. சட்டத்துக்கு புறம்பாக மதுபான பார்கள் நடத்தப்படுகிறது.

இவை அனைத்தையும் மனுவாக தயாரித்து கவர்னரிடம் வழங்கி உள்ளோம். மேலும், ஆன்லைன் ரம்மி தொடர்பான தமிழக அரசின் திருத்தப்பட்ட சட்ட முன்வடிவை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்குமாறு கவர்னரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story