சிலுவம்பாளையத்தில் பொதுமக்களிடம் குறை கேட்ட எடப்பாடி பழனிசாமி
சிலுவம்பாளையத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
எடப்பாடி:
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் பொது மக்களை சந்தித்து, குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். முன்னதாக சொந்த கிராமத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது சிலுவம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் 15-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விரைவாக செயல்பட்டு இந்த பகுதி மக்களுக்கு இலவச வீடு கிடைக்க ஆவண செய்யுமாறு உத்தரவிட்டார்.
அப்போது நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன், எடப்பாடி நகர மன்ற எதிர்க்கட்சி தலைவர் முருகன், கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாதேஸ், நகர மன்ற முன்னாள் தலைவர் டி.கதிரேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.