பழனி முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்


பழனி முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Aug 2022 5:40 AM GMT (Updated: 8 Aug 2022 5:49 AM GMT)

பழனி முருகன் கோவிலில் எடப்பாடி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார்.

பழனி,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7.15 மணியளவில் பழனி மலைக்கோவிலுக்கு வந்தார்.

அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்த அவர் காலசாந்தி மற்றும் சிறுகாலசந்தி பூஜையில் கலந்து கொண்டார். மூலவருக்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பின்பு கோவில் உட்பிரகாரமாக வலம் வந்து வழிபட்டார்.

அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக நேற்று இரவு பழனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பழனி முருகனின் அருளால் வெள்ளம்போல் திரண்டு இருக்கும் தொண்டர்கள் மத்தியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன். அ.தி.மு.க. தொண்டர்களின் இயக்கம் என்பதற்கு இதுவே சான்று.

தி.மு.க. உள்பட எத்தனை கட்சிகள் அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தாலும் மக்கள் துணையோடு அதனை வீழ்த்துவோம். தமிழகத்தில் தி.மு.க. குடும்ப ஆட்சி நடத்துகிறது. ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. இலங்கையில் குடும்ப ஆட்சி நடந்ததால் மக்கள் புரட்சி ஏற்பட்டு அவர்களை நாட்டை விட்டே வெளியேற்றினர்.

தமிழகத்திலும் குடும்ப ஆட்சி தொடர்ந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறார். கடந்த 14 மாதங்களில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை.

அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் அக்கறையுடன் குரல் கொடுத்து வருகிறது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் அமைச்சர்கள் அங்கு செல்லாமல் மக்களை சந்திக்காமல் தவிர்த்து வருகின்றனர்.

போதைப்பொருளை கட்டுப்படுத்த உதவுங்கள் என்று மக்களிடம் தி.மு.க. கேட்கிறது. ஆன்லைன் ரம்மி தொடர்பான வழக்கில் அரசு கோர்ட்டில் சரியாக வாதாடாமல் இருந்து விட்டது. பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதால் ஆன்லைன் ரம்மி குறித்து மக்களின் கருத்தை கேட்பதாக தி.மு.க. நாடகமாடுகிறது.

மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் சொத்து வரி, மின் கட்டண உணர்வு போன்ற வரிச்சுமையை தி.மு.க. அரசு அளித்துள்ளது. எனவே இந்த தி.மு.க. அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.





Next Story