நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்


நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம்  -  எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 13 Dec 2023 3:22 PM IST (Updated: 13 Dec 2023 4:13 PM IST)
t-max-icont-min-icon

இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் அங்கு புகை மண்டலம் எழுந்தது. இதனால் அங்கிருந்த எம்பிக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய இருவரால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. தடை செய்யப்பட்ட பொருட்களுடன் மக்களவையில் நுழைய முயன்ற இருவரை தடுத்துநிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.

இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story