'8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தவர்கள் தற்போது வேண்டும் என்கிறார்கள்'சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தவர்கள் தற்போது அதனை வேண்டும் என்கிறார்கள்’ என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம்,
அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது
பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அதிலிருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணையும் விழா நேற்று சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதற்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அ.தி.மு.க.வில் அவர்களை இணைத்து கொண்டார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
எதிர்காலத்தில் அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியாது. அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பு கொடுத்தீர்கள். இதனால் சேலம் மாவட்டம் வளர்ச்சி அடைந்தது. சேலம் வளர்ந்து வரும் நகரம். போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க தேவைப்படும் இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இந்தியாவிலேயே தார்சாலைகள் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் திகழ்ந்தது. நாம் பெற்ற பிள்ளைகளுக்கு தற்போது தி.மு.க. அரசு பெயர் வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
திராவிட மாடல் ஆட்சி
அ.தி.மு.க. ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வந்த போது தி.மு.க.வினர் அதை எதிர்த்தனர். தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு திருவண்ணாமலையில் போராட்டமே நடத்தினார். அவர்களது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்த விவசாயிகளை தூண்டி விட்டார்கள். ஆனால் தற்போது 8 வழிச்சாலை திட்டம் வேண்டும் என்று அதனை எதிர்த்தவர்கள் கூறுகிறார்கள்.
நான் கொண்டு வந்தால் தவறு என்றார்கள், அவர்கள் கொண்டு வந்தால் சரி என்கிறார்கள். உலகத்தரத்திற்கு இணையாக பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி போராடி பெறப்பட்டது. ஒரு திட்டம் கொண்டு வந்தால் வேண்டும் என்றே எதிர்ப்பு தெரிவிப்பது. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிப்பது தான் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி.
கிடப்பில் போட்டு உள்ளது
ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் திட்டத்தை சேலத்தில் அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தி இருந்தால் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்து இருக்கும். தமிழகத்திற்கே முன்மாதிரியான திட்டமான பஸ்போர்ட் திட்டம் சேலத்தில் அமைக்கப்பட இருந்தது.
கிராமம் முதல் நகரம் வரை அம்மா மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அது செயல்படவில்லை. 4 மாதத்தில் முடிவடையும் அத்திக்கடவு, அவினாசி திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்ட வரப்பட்ட திட்டங்களை தற்போது தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி முதல்-அமைச்சர் ஆனாலும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறார். அடிமை தனத்துக்கு ஒரு அளவே இல்லையா?. இவ்வாறு இருந்தால் மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும். கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே நன்மை கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சந்திரசேகரன் எம்.பி., அமைப்பு செயலாளர் செம்மலை, மணி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாஜலம், பல்பாக்கி கிருஷ்ணன், எம்.கே.செல்வராஜ், வெற்றிவேல், ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், கோவிந்தராஜ், ராஜேந்திரன், மணிமுத்து, சுப்பிரமணி, ஓமலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னாள் ஊராட்சி செயலாளர் தர்மன் என்கிற வெள்ளையன், செலவடை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமசுந்தரம் மற்றும் செம்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக பிரேமா தர்மன் வரவேற்றார். முடிவில் முருகன் நன்றி கூறினார்.