சென்னையில் இருந்து தொடர் ஜோதி ஓட்டம் -எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்


சென்னையில் இருந்து தொடர் ஜோதி ஓட்டம் -எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
x

மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டையொட்டி, சென்னையில் இருந்து தொடர் ஜோதி ஓட்டத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு, வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் 51 பேர், சென்னையில் இருந்து மதுரை நோக்கி தொடர் ஜோதி ஓட்டம் புறப்படுகிறார்கள்.

இந்த தொடர் ஜோதி ஓட்டத்தை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

இதில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை மாநாட்டில்...

எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த நிலையில் தொடர் ஜோதி ஓட்டக்குழுவினர், கட்சி அலுவலக வளாகத்தில் இருந்த எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலை அமைந்திருக்கும் பீடங்களை 3 முறை சுற்றிவந்துவிட்டு, தங்கள் ஓட்டத்தை தொடர்ந்தனர்.

சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த தொடர் ஜோதி ஓட்டம் செங்கல்பட்டு, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், விராலிமலை, மதுரை பைபாஸ் வழியாக, வருகிற 20-ந்தேதி மாநாட்டு திடலை சென்றடைகிறது. அதனைத்தொடர்ந்து தொடர் ஜோதி ஓட்டக்குழுவினர், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜோதியை ஒப்படைப்பார்கள்.

வரலாற்றை மறைப்பதா?

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1989-ம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட திருநாவுக்கரசர், வாழ்நாள் முழுவதும் அ.தி.மு.க.வுக்கு நன்றிக்கடன் பட்டவர். அதை விடுத்து உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யவேண்டாம். மீண்டும் எம்.பி.யாகும் நப்பாசை இருக்கலாம். அதற்காக வரலாற்று சம்பவத்தை மறைத்து பொய் சொல்வது மாபெரும் தவறு. இவர், அ.தி.மு.க.வில் இருந்ததை நினைத்தாலே வேதனையாக உள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு, "எங்களை தாக்கிவிட்டு நாங்கள் தாக்கியதாக சொல்வது கருணாநிதியின் கற்பனை. துச்சாதனர்கள், துரியோதனர்கள் விரைவில் அழிவார்கள்', என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். எனவே எதையும் தவறாக பேசக்கூடாது.

நீட் தற்கொலைகளுக்கு...

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ஒழிப்போம் என்றனர். அந்த சூட்சமம் எங்களுக்கு தெரியும் என்றனர். ஆனால் எதையும் செய்யாமல் ஏமாற்றுகிறார்களே... நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் கொடுத்தார்களா? பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்தார்களா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக எத்தனை முறை பிரதமரை சந்தித்துள்ளார். பேனா சின்னத்துக்கான அனுமதி கேட்டுதான் அவர் போனார். மற்றபடி எதற்காகவும் அவர் சந்திக்கவில்லை. எனவே தமிழகத்தில் நிகழும் நீட் தற்கொலைகளுக்கு தி.மு.க. அரசு தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story