'எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆவார்' தமிழ்மகன் உசேன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆவார் என்று தமிழ்மகன் உசேன் கூறினார்.
சென்னை,
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற மகத்தான, வெற்றிகரமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. இந்த இயக்கம் (அ.தி.மு.க.) உழைப்பவர்கள் கைகளில்தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த தீர்ப்பு.
தற்போது அ.தி.மு.க. ஒருங்கிணைந்துதான் இருக்கிறது. எனவே ஒருங்கிணைக்கத் தேவையில்லை. 99 சதவீத அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் இந்த இயக்கம் எடப்பாடி பழனிசாமி கையில்தான் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். எனவே அவரை இடைக்கால பொதுச்செயலாளராக நாங்கள் நினைக்கவில்லை. அவர் நிரந்தர பொதுச்செயலாளர்தான். இதை நீங்கள் விரைவில் பார்க்கப் போகிறீர்கள். பொதுச்செயலாளர் தேர்தல் தேதி குறித்து தலைமைக் கழகம் சார்பில் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
தனித்தனியாக பிரிந்து இருப்பவர்களை கட்சியின் நடவடிக்கை மூலமாக நீக்கி இருக்கிறோம். அவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது பற்றி தலைமைக் கழகம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தம்பிதுரை பேட்டி
பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பை ஜனநாயகத்துக்கு கிடைத்த, அ.தி.மு.க. தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.
எடப்பாடி பழனிசாமியை இந்த மாதத்துக்குள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கால் கால தாமதம் ஆனது.
தற்போது எடப்பாடி பழனிசாமி முறைப்படி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவார். இதில் அவரே வெற்றி பெறுவதற்குத்தான் முழு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தொண்டர்கள் அவரைத்தான் விரும்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள். அவருக்குத்தான் எங்கு சென்றாலும் கூட்டம் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.