'அ.தி.மு.க.வுக்கு மீண்டும் வந்தால் சேர்த்துக்கொள்வோம்' எடப்பாடி பழனிசாமி அழைப்பு


அ.தி.மு.க.வுக்கு மீண்டும் வந்தால் சேர்த்துக்கொள்வோம் எடப்பாடி பழனிசாமி அழைப்பு
x

அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்றவர்களில் ஒரு சிலரை தவிர மீண்டும் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் நேற்று அங்கீகரித்தது.

இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டசபை நிகழ்வில் பங்கேற்றிருந்தார். எனவே அவருக்கு அங்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவருக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்பட முன்னாள் அமைச்சர்களும், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி உள்பட ஏராளமான நிர்வாகிகளும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒரு சிலரை தவிர...

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நீதிமன்றமும் இதை தெரிவித்துள்ளது. அ.தி.மு.க இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்.

ஒரு சிலரை தவிர்த்து உண்மையாக இந்த கட்சியை நேசிப்பவர்கள் கட்சிக்கு வந்தால் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி மீண்டும் பொதுக்குழு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் ஒற்றை தலைமை என சொல்ல வேண்டாம். என்னை பொறுத்தமட்டில் நான் ஒரு சாதாரண தொண்டன் தான். கட்சிக்கு ஒரு தலைமை தேவை.

என்னை பொறுத்தமட்டில் என்றைக்கும் தொண்டனாகவே இருப்பேன்.

மீண்டும் ஆட்சிக்கு வருவோம்

தி.மு.க.வை எதிர்க்கக்கூடிய தெம்பும், திராணியும் உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும்தான். தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்களது லட்சியம்.

சில சுயநலவாதிகள் மட்டும் பிரிந்து சென்றுள்ளனர். உண்மையான தொண்டர்கள் நிறைந்து இருக்கிறார்கள். 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு பேராதரவு உள்ளது. அ.தி. மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்.

கர்நாடக தேர்தலில் போட்டி ஏன்?

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்து சபாநாயகருக்கு மீண்டும் மனு கொடுப்போம். சபாநாயகர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

கர்நாடகாவில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. எங்களது அடையாளத்தை காட்டுவதற்காக தனித்து போட்டியிடுகிறோம். இதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வின் 'பி' டீம்

இன்றைய ஆட்சியாளர்களுக்கு கைப்பாவையாக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். தி.மு.க.வின் 'பி' டீமாக அவர் செயல்படுகிறார்.

அவர்களது திட்டத்தின் அடிப்படையில் தான் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story