எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது


எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது
x

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று சசிகலா கூறினார்.

புதுக்கோட்டை

அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சாவூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழா நடந்தது. இதில் வி.கே.சசிகலா கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் தொண்டர்களை மதிக்கக்கூடியவர்கள். தற்போது அ.தி.மு.க.வில் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. பணபலம், படைபலம் கொண்டு பதவியை பிடிக்க நினைப்போரை நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது. எனது சுற்றுப்பயணத்தில் தொண்டர்களும், பொதுமக்களும் என்னுடன் இருப்பதை உணரமுடிகிறது. ஒரு பாலைவனத்தில் குதிரையை ஓட்டிச் சென்ற வேலைக்காரனும், அதில் பயணித்த பயணியும் குதிரையின் நிழலுக்காக அடித்துக் கொண்டனர்.

இதை கவனித்த குதிரை தன்னை வளர்த்தவரிடமே திரும்பிவந்தது. நிஜத்தை மறந்து நிழலுக்காக யாரும் செல்லமாட்டார்கள். தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் செல்லாது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. தற்போதைய தி.மு.க. அரசில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொதுச்செயலாளர் தேர்வு கூட்டம் நடத்தியதே தவறானது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரானதே கேள்விக்குறியாக இருக்கும்போது ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது எப்படி செல்லும். அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு கழக தொண்டர்கள் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள்.

தி.மு.க.வில் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததினால் தான் எம்.ஜி.ஆர். தனிக்கட்சியையே தொடங்கினார். அது மட்டுமின்றி தொண்டர்களால் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறை கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த முறை பின்பற்றப்படவில்லை. எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதை அ.தி.மு.க. தொண்டர்களும் விரும்பவில்லை. அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த பொதுமக்களும் விரும்பவில்லை.

அனைவரும் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது

என்னை நாடி ஓ.பன்னீர்செல்வம் வந்தால் அதைப்பற்றி காலம், சூழ்நிலைக்கு ஏற்பதான் முடிவு எடுக்க முடியும். ஒட்டுமொத்த தொண்டர்களின் குரல்தான் இறுதியானது. அதுதான் வெற்றி பெறும். ஜெயலலிதா காலத்தில் நானும் பல பொதுக்குழுக்களுக்கு சென்றிருக்கிறேன். கட்சி வரவு, செலவு அறிக்கையை பொறுத்தவரை பொருளாளர் தான் வாசிக்க முடியும். அப்படி இருக்கும்போது தற்போது வேறு ஒருவர் வாசிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.

கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் என்னைத்தான் (சசிகலா) ஆதரிக்கிறார்கள். நான் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது இதை உணர்ந்திருக்கிறேன். நான் இல்லாத சமயத்தில், மனஸ்தாபத்தினால் அ.தி.மு.க.வில் சிலர் பிரிந்திருக்கலாம். அவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே அ.தி.மு.க.வை உருவாக்கி வெற்றியை பெறுவோம். தமிழகத்தில் ஆட்சியை அமைப்போம். தற்போதைய சூழ்நிலையை பார்க்கும்போது கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story