அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து மதிப்பை கணக்கெடுத்து சோதனை நடத்துவோம் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து மதிப்பை கணக்கெடுத்து சோதனை நடத்துவோம் என்று ஆட்டையாம்பட்டியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்
பொதுக்கூட்டம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி ஆட்டையாம்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வீரபாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வருதராஜ் வரவேற்றார்.
இதில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் இயக்கம்
பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூன்று தலைவர்களும் மக்களுக்காக உழைத்தவர்கள். உயிரோட்டமுள்ள திட்டங்களின் மூலம் அவர்கள் மறைவிற்கு பின்னரும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் தான் மக்கள் இயக்கமாக அ.தி.மு.க நீடிக்கிறது.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என கருணாநிதி நினைத்தார். ஆனால் அதை முறியடித்து 1991-ல் மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்தார் ஜெயலலிதா. அதன்பிறகு ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க ஆட்சியை அகற்ற மு.க.ஸ்டாலின் நினைத்தார். ஆனால் 4 ஆண்டுகள் சிறப்பான முறையில் நான் ஆட்சி நடத்தினேன்.
முதல்-அமைச்சராக நான் இருந்தபோது, அதிகமான போராட்டங்களை சந்தித்தேன். யார் போராட்டம் நடத்தினாலும் அனுமதி வழங்கினோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. தற்போது அ.தி.மு.க. நடத்திய ஒரு போராட்டத்திற்கே தி.மு.க அரசு பயந்து விட்டது.
மின் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் சொத்துவரி, வீட்டு வரியை தொடர்ந்து தற்போது மின் கட்டணம் 12 முதல் 53 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படும். மக்களை பற்றி தி.மு.க. அரசுக்கு கவலையில்லை. தேர்தல் வாக்குறுதியில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை கொண்டுவரப்படும் என்று கூறியது என்னாச்சு? அதை ஏன் அமல்படுத்தவில்லை?.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மின்வெட்டும், மின் கட்டண உயர்வும் தான் மிச்சம். அ.தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. ஏழை, எளிய குடும்பங்களின் கனவை சிதைத்த தி.மு.க அரசை மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த திட்டத்தை தொடர வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
எந்த தகுதியும் கிடையாது
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகிறது. ஆனால் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க ஆட்சியில் 4 முதல்-அமைச்சர்கள் என்று நான் சொன்னதற்கு, நிறைய முதல்-அமைச்சர்கள் இருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார். 4 முதல்-அமைச்சருக்கே நாடு தாங்கவில்லை. இன்னும் நிறைய பேர் என்றால் நாமெல்லாம் வெளிநாட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
அ.தி.மு.க.பொதுக்குழு கூடி என்னை இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தார்கள். ஆனால் என்னை டெம்பரவரி தலைவர் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். கருணாநிதி இருக்கும்போது மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக தான் இருந்தார். எங்களை பற்றி குறை சொல்வதற்கு மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதி கிடையாது.
சோதனை நடத்துவோம்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துகிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க.வை மிரட்ட முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இதுபோன்ற பல சோதனைகளை எதிர்கொண்டு ஆட்சிக்கு வந்தனர். அதேபோல மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வரும். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஆட்சி நடத்தவில்லை. யாரையும் பழிவாங்கவில்லை. மாற்றுக்கட்சி, எதிர்க்கட்சியினரை பழிவாங்கவில்லை. ஆனால் அன்றைக்கு வேறு, இன்றைக்கு வேறு. சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வேகம் காட்டப்படுவதில்லை. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய பார்க்கிறார்கள். காவல்துறையை வைத்து வழக்குகளை வாபஸ் பெற பார்க்கிறார்கள். மக்கள் துணையோடு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவிக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது? தற்போது எவ்வளவு இருக்கிறது? என்பதை கணக்கெடுத்து சோதனை நடத்தப்படும்.
அழிக்க முடியாது
அ.தி.மு.க.வில் மட்டும் தான் ஜனநாயகம் இருக்கிறது. சாதாரண விவசாயி கூட அ.தி.மு.க.வில் பொறுப்பிற்கு வர முடியும். ஆனால் தி.மு.க.வில் அப்படி வர முடியாது. அ.தி.மு.க.வை எவராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அதற்கு அனைத்து மக்களும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜா என்கிற ராஜமுத்து, ஜெயசங்கரன், நல்லதம்பி, சித்ரா, சுந்தரராஜன், வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோன்மணி, புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்திரன், வையாபுரி, வெங்கடேசன், ஜெகநாதன், சேலம் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் குருபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.