எடப்பாடி பழனிசாமியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது -அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


எடப்பாடி பழனிசாமியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது -அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை, எடப்பாடி பழனிசாமியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி,

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வார்டுகள் மறுவரையறை, மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சிகளில் தற்போது பதவி வகிப்பவர்களின் பதவி காலம் வருகிற 2024-ம் ஆண்டுடன் முடிவடைய இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும், எந்த பகுதியில் மக்கள் அதிகமாக உள்ளார்கள் என்பதை கண்டறிந்து வார்டு மறுவரையறை செய்ய குழு அமைக்கப்படும்.

சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தபிறகு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சென்னை, கோவை, மதுரை போன்ற பகுதிகளில் ஒரு வார்டில் 10 ஆயிரம் பேரும், மற்றொரு வார்டில் 20 ஆயிரம், 30 ஆயிரம் பேரும் உள்ளனர். அதையெல்லாம் ஆராய்ந்து, வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும். அதை அந்த குழு தான் முடிவு செய்யும்.

வாய்ப்பு இல்லை

தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை. முதல்-அமைச்சர் பிரமாண்டமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story