எடப்பாடி பழனிசாமியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாதுஅமைச்சர் கே.என்.நேரு பேட்டி


எடப்பாடி பழனிசாமியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாதுஅமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை, எடப்பாடி பழனிசாமியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை, எடப்பாடி பழனிசாமியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

வார்டு மறுவரையறை

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வார்டுகள் மறுவரையறை, மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சிகளில் தற்போது பதவி வகிப்பவர்களின் பதவி காலம் வருகிற 2024-ம் ஆண்டுடன் முடிவடைய இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும், எந்த பகுதியில் மக்கள் அதிகமாக உள்ளார்கள் என்பதை கண்டறிந்து வார்டு மறுவரையறை செய்ய குழு அமைக்கப்படும்.

சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தபிறகு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். திருச்சியை பொறுத்தவரை 65 வார்டுகள் உள்ளன. தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை போன்ற பகுதிகளில் ஒரு வார்டில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். மற்றொரு வார்டில் 20 ஆயிரம், 30 ஆயிரம் பேர் உள்ளனர். அதையெல்லாம் ஆராய்ந்து, வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும். அதை அந்த குழு தான் முடிவு செய்யும்.

வாய்ப்பு இல்லை

தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை. முதல்-அமைச்சர் பிரமாண்டமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

மெட்ரோ ரெயில் திட்ட ஆய்வு பணிக்காக, திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் ஆய்வு பணிகள் முடிந்த பின்பு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். திருச்சியில் புதிய காவிரி பாலம் அமைப்பதற்கு, மத்திய அரசு அலுவலகம் ஒன்றை அகற்ற வேண்டி உள்ளது. அவர்களுடன் பேசி அது அகற்றப்பட்டு பின்பு புதிய காவிரி பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும்.

திருச்சி புறக்கணிக்கப்படவில்லை

தி.மு.க. ஆட்சியில் திருச்சி புறக்கணிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் கொடுத்திருக்கிறார். 20 மாத தி.மு.க. ஆட்சியில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் திருச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க. திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை.

ஆனால் பல கோடி மதிப்பிலான திட்டங்களை தி.மு.க. அரசு செய்து வரும் நிலையில் ஊடகங்கள் தான் திருச்சி புறக்கணிக்கப்படுவதாக கூறுகிறது. திருச்சி ஒருபோதும் புறக்கணிக்கப்படமாட்டாது. திருச்சியை நேசிப்பவராக முதல்-அமைச்சர் இருக்கிறார். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு நிதியை அவர் வழங்குகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story