படித்தவர்கள், பாமரர்கள் என்றுஅனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க.தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
படித்தவர்கள், பாமரர்கள் என அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க. என்று எடப்பாடி பழனிசாமி ஈரோடு தேர்தல் பிரசாரத்தின்போது ஆவேசமாக கூறினார்.
பச்சை பொய்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு வாக்கு கேட்டு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-வது நாளாக நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்தார். கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் முதல் சூரம்பட்டி நால்ரோடு வரை பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஆதரவு திரட்டினார்.
அவர் ராஜகோபால் தோட்டம் பகுதியில் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் செய்யவில்லை என்று பச்சை பொய் கூறுகிறார்.
21 மாத ஆட்சியில் தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பணி கூட செய்யவில்லை. ஈரோட்டுக்கு எந்த பணியை செய்து இருக்கிறீர்கள் என்று இப்போது வீதி வீதியாக வாக்கு கேட்டு வரும் அமைச்சர்களிடம் கேளுங்கள்.
நாங்கள் மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை நிறைவேற்றி நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்டு வருகிறோம். ஆனால் 21 மாதங்கள் பல்வேறு துறைகளிலும் கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு மக்களை ஏமாற்றி ஆசைவார்த்தை கூறி வாக்கு பெறலாம் என்று எண்ணிக்கொண்டு அமைச்சர்கள் வருகிறார்கள்.
வழக்கு
அமைச்சர்கள் வீதி வீதியாக வந்து வாக்காளர்களுக்கு ரூ.1000, ரூ.2000 என்று கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக சென்னை, புதுடெல்லி தேர்தல் ஆணைய அலுவலகங்களுக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் கோர்ட்டில் இதுபற்றி வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்.
கருணாநிதியின் நினைவாக கடலில் ரூ.81 கோடியில் எழுதாத பேனா சிலை வைக்கப்போகிறார்களாம். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும் சிலை வைத்தே தீருவேன் என்று கூறுகிறார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் 520 வாக்குறுதிகள் கொடுத்தார். 200 பக்கம் கொண்ட அந்த புத்தகத்தில் அவர் கூறிய எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
உரிமைத்தொகை வழங்கினார்களா?
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கினார்களா?, கியாஸ் மானியம் ரூ.100 தருவேன் என்றார். கொடுத்தாரா?. இப்போது 21 மாதங்கள் ஆகிவிட்டது. 21 மாதங்களுக்கு உரிமை தொகை ரூ.21 ஆயிரம், கியாஸ் மானியம் ரூ.2,100 என மொத்தம் ரூ.23 ஆயிரத்து 100 கொடுத்து விட்டு வாக்கு கேட்டு வாங்க என்று அமைச்சர்களிடம் கேளுங்கள். எல்லா வாக்குறுதிகளையும் கொடுத்து விட்டு ஏமாற்றியவர்கள் தி.மு.க.வினர். தை பொங்கலுக்கு முதலில் ரூ.1000,பொங்கல் தொகுப்பு, பின்னர் ரூ.2,500 பொங்கல் தொகுப்பு, முழு கரும்பு வழங்கினோம். தி.மு.க. ஆட்சியில் ரூ.1000 தருவதற்கு எத்தனை போராட்டங்கள். ஒரு முழு கரும்பு பெறுவதற்கே போராட்டம் நடத்த வேண்டியது இருந்தது. பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல் செய்த ஒரே அரசு தி.மு.க. அரசு.
ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது
நான் முதல்-அமைச்சராக இருந்தபோது 110 விதியின் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்கினேன். ஆனால் 21 மாத தி.மு.க. ஆட்சியில் 7 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.
10 ஆண்டுகளில் 53 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்தோம். அதை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. அம்மா 2 சக்கர வாகனம் வழங்கும்திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என்று அ.தி.மு.க. திட்டங்களை நிறுத்தி விட்டனர். மின்கட்டணம் 54 சதவீதம் உயர்த்தி விட்டனர். இன்னும் 4 ஆண்டுகளில் 24 சதவீதம் உயரும். வீட்டு வரி, கடைவரி என அனைத்தும் உயர்ந்து விட்டது. இப்படி படித்தவர்கள், பாமரர்கள் என்று அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க., எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தாரை-தப்பட்டை முழங்க...
முன்னதாக சுப்பிரமணியம் கோவில் பகுதியில் இருந்து காவிரி ரோடு வழியாக ராஜகோபால் தோட்டம் பகுதியில் மக்களை சந்தித்து அவர் வாக்குகள் சேகரித்தார். பின்னர் வண்டியூரான்கோவில், காமாட்சி அம்மன் கோவில் வீதி வழியாக தேர்முட்டி பகுதிக்கு சென்றார். சின்னமாரியம்மன் கோவில், அரசிளங்கோ வீதி, பொன்னுசாமி வீதி, மரப்பாலம், மரப்பாலம் மெயின் ரோடு வழியாக பெரிய மாரியம்மன் கோவில் வீதி, ரங்கநாதன் வீதி, அருள்மொழி வீதி, கற்பகம் லே-அவுட் பகுதிகளில் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுடன் சென்று மக்களிடம் ஓட்டுகள் கேட்டார். .
இந்த பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் ரா.மனோகரன், கே.சி.பழனிச்சாமி, முருகு சேகர், கேசவமூர்த்தி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, பா.ஜ.க. விவசாய பிரிவு துணைத்தலைவர் தங்கராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அவர் சென்ற இடங்கள் எல்லாம் அ.தி.மு.க. கொடிகள் தோரணங்களாக கட்டப்பட்டு இருந்தன. கட்சியினர் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை கொடுத்தும், தாரை-தப்பட்டைகள் முழங்க வரவேற்றனர்.