படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உதவித்தொகை
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1-10-2022 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து 30-9-2022 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
ஆண்டு வருமானம்
மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளியிறுதி வகுப்பு வரையிலான தகுதிக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.750 வீதமும் மற்றும் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.1,000 வீதம் வழங்கப்படும். இதர மனுதாரர்கள் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 வீதமும், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ரூ.300 வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.400 வீதமும் மற்றும் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.600 வீதம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு
இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31-12-2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்படி இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, விண்ணப்பித்து மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
நவம்பர் 30-ந்தேதிக்குள்...
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்ட பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெற்று வரும் பயன்தாரர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்கவும் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.