கல்வி மட்டுமே ஒருவரை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்


கல்வி மட்டுமே ஒருவரை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்
x

கல்வி மட்டுமே ஒருவரை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கும் நிகழ்ச்சியில் சக்தி அம்மா கூறினார்

வேலூர்

கல்வி மட்டுமே ஒருவரை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கும் நிகழ்ச்சியில் சக்தி அம்மா கூறினார்

சரஸ்வதி யாகம்

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் சிறப்பாக வெற்றி பெற ஸ்ரீமேதா சூக்தயாகம் என்ற ஸ்ரீசரஸ்வதி யாகம் இன்று நடைபெற்றது.

ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு சக்தி அம்மா தலைமை தாங்கி சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட எழுதுகோல்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

பின்னர் சக்தி அம்மா பேசியதாவது:-

மாணவர்களாகிய உங்களுக்கு பிடித்த சினிமா ஹீரோ ஒருவராவது இருப்பார்.

ஆனால் அவர்கள் நிஜத்தில் ஹீரோ இல்லை. நீங்கள் தான் நிஜ ஹீரோ. தன்னைப்போல் மற்றவர்களையும் உயர்த்த நினைப்பவர்கள் யாரோ அவர்கள் தான் நிஜ ஹீரோ. சமுதாயத்தில் கல்வி மட்டுமே ஒருவரை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும். நன்மை செய்ய முடியும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு கல்வி தேவை. அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.

படிப்பில் மட்டும் கவனம்

நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் நிஜ ஹீரோவாக வர வேண்டும். படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி மற்றவைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு பயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த யாகம் நடத்தப்படுகிறது. இந்த யாகத்தின் மூலம் சரஸ்வதி தேவியின் சக்தி இந்த பேனாவில் இருக்கும். போருக்கு செல்லும் வீரருக்கு ஆயுதம் தேவைப்படுவது போல் தேர்வு எழுத செல்லும் உங்களுக்கு இந்த பேனா ஆயுதமாக இருக்கும்.

கடைகளில் இருக்கையில் இது ஒரு சாதாரண பேனா. ஆனால் பூஜை செய்த பிறகு சரஸ்வதி தேவியின் பூரண சக்தி கிடைத்து உள்ளது. இதனால் அரிய சக்தி கிடைத்து மகா சரஸ்வதி தேவி உங்களுக்கு துணையாக இருப்பார்.

இதனால் தேர்வு எழுதும் போது உங்களுக்கு பதற்றம் வராது. சிறப்பான முறையில் தேர்வு எழுதி நல்ல நிலையை அடைந்து நீங்களும் உயர்ந்து உங்களை சார்ந்தவர்களையும் முன்னேற்ற வேண்டும்.

இவ்வாறு சக்தி அம்மா பேசினார்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு, ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலாஜி, அறங்காவலர் சவுந்தரராஜன், ஸ்ரீநாராயணி பீட மேலாளர் சம்பத், சக்தி அம்மாவின் வெளிநாட்டு பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story