அடுத்த மாதம் முதல் வட்டார அளவில் கல்வி கடன் முகாம்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அடுத்த மாதம் முதல் வட்டார அளவில் கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அடுத்த மாதம் முதல் வட்டார அளவில் கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
குடிநீர் பிரச்சினை
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-
நடப்பு நிதி ஆண்டிற்கான முதலாம் காலாண்டு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை பற்றி தெரிவித்தனர். எனவே அமைச்சர்கள் தலைமையில் வரும் நாட்களில் இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ெஜயசீலன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் முன்னிலை பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் முன்னேறிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவித்து 5 ஆண்டுகளாகியும் சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாவட்டத்தில் நீர்வளம் மேம்படுத்த உறுதி அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது மத்திய அரசின் ஏமாற்று வேலையாகும். ஆவின் நிர்வாக சீர்கேட்டை சீரமைக்க அமைச்சருக்கு கூடுதல் அவகாசம் தேவை.
கல்விக்கடன் முகாம்
விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் கண்மாய்களை மராமத்து செய்வதற்கான நடவடிக்கை எதையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
நாடாளுமன்ற தொகுதியில் வருகிற ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மாதத்தில் 2-வது வாரத்தில் வட்டார அளவில் கல்விக்கடன் முகாம் நடத்தப்படும். மாவட்டத்தில் உள்ள வங்கியாளர் ஆய்வு குழு கூட்டத்தின் முடிவில் அதுபற்றிய அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட முன்னோடி வங்கியிடம் அறிவுறுத்தப்படும். கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வர வாய்ப்பில்லை என்று தெரிவித்தது முதல்-அமைச்சரை குறிப்பிட்டு அல்ல என்று நினைக்கிறேன். மோடி கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். எனவே பிரதமரை குறிப்பிட்டு தான் கவர்னர் தெரிவித்துள்ளார். அவர் பா.ஜ.க. மாநில தலைவர் போல் செயல்பட்டு வருகிறார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவரது உரிமை. தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி பெற வாய்ப்பில்லை என்று அ.தி.மு.க. கூறுவது ஏற்புடையதல்ல. முதலில் அவர்கள் கட்சி கரைந்து போவதை தடுக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன், தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுமான், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், கண்காணிப்பு குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி யூனியன் மற்றும் பேரூராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.