நற்பண்புகள் இல்லாத கல்வி சமுதாயத்திற்கு பயன்படாது
நற்பண்புகள் இல்லாத கல்வி சமுதாயத்திற்கு பயன்படாது என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசினாா்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வள்ளலார் மற்றும் ராமசாமி படையாச்சியார் அறக்கட்டளைகள் சார்பில் தமிழக அரசின் உயர்கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கு துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை தாங்கினார். மாணவர் உதவி மற்றும் முன்னேற்ற மைய இயக்குனர் பேராசிரியர் தெய்வசிகாமணி வரவேற்றார். சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாசுமன் வாழ்த்துரை வழங்கினார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு 125 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், 1999-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாணவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக வள்ளலார் மற்றும் ராமசாமி படையாட்சியார் அறக்கட்டளைகள் மூலம் இந்த கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊக்கத்தொகை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் கடலூர் மாவட்டம் பெருமை பெற்றுள்ளது. மாணவர்கள் படிக்கும் காலத்தில் சிறப்பான கல்வியை பெற தமிழக முதல்-அமைச்சர் நான் முதல்வன் என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்கும் காலத்தில் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி படிக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் போதே நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். நற்பண்புகள் இல்லாத கல்வி சமுதாயத்திற்கு பயன்படாது. மாணவர்கள் கல்வி பயில பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அவர்கள் மாணவர்கள் கல்வி கற்பதற்கு நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் சிதம்பரம் தாசில்தார் செல்வகுமார், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் காயத்ரி நன்றி கூறினார்.