காமராஜர் பிறந்தநாளன்று ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் -கே.எஸ். அழகிரி அறிவிப்பு
காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாளன்று ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கே.எஸ். அழகிரி அறிவிப்பு.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில்தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. அதனால் தான் காமராஜர் ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து பாராட்டுகிறார்கள்.
காமராஜரின் 120-வது பிறந்தநாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஜூலை 15-ந் தேதி அன்று 'காமராஜர் ஆட்சி முறை' என்கிற தலைப்பில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோல, நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் முன்னின்று இத்தகைய கருத்தரங்குகளை நடத்த இருக்கிறார்கள். ஏழை-எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குகிற வகையிலும் நிகழ்ச்சிகள் அமைய உள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டு இன்றைய காங்கிரசின் அடையாளமாக திகழ்பவர் காமராஜர். எனவே அவரின் பிறந்தநாளை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று நன்றிப் பெருக்கோடு அவருக்கு புகழ்மாலை சூட்டுவது அனைவரது கடமையும், பொறுப்புமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.