மாற்று இடம் தராமல் குடிசை வீடுகளை அகற்ற முயற்சி


மாற்று இடம் தராமல் குடிசை வீடுகளை அகற்ற முயற்சி
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே மாற்று இடம் தராமல் குடிசை வீடுகளை அகற்றும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே மாற்று இடம் தராமல் குடிசை வீடுகளை அகற்றும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடிசை வீடுகள்

குலசேகரம் அருகே திருந்திக்கரை வெள்ளங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தின் முன்பாக நெடுஞ்சாலைத்துறை புறம்போக்கில் 7 குடிசை வீடுகள் உள்ளன.

இந்த வீடுகளை அகற்றுமாறு தனியார் சார்பில் ஐகோர்ட்டு கிளையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவு படி வீடுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் வந்த போது குடிசைவாசிகள் தங்களுக்கு மாற்று இடமும், வீடும் வேண்டுமென்று கோரிக்கை வைத்த நிலையில் வீடுகள் அகற்றப்படவில்லை.

மாற்று இடம்

மேலும் குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் சார்பில் மாற்று இடமும், வீடும் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அப்போது கோர்ட்டு, குடிசை வீடுகளில் வசிக்கும் 7 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 7 குடும்பங்களுக்கு பேச்சிப்பாறை ஊராட்சி அன்பு நகரில் மாற்று இடத்திற்கான பட்டா வழங்கப்பட்டது. அதே வேளையில் பட்டா வழங்கப்பட்டுள்ள இடத்தை சரியாக அடையாளம் காட்டப்படாத நிலையில் குடிசைவாசிகள் அந்த இடத்திற்கு செல்லவில்லை.

ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி

இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று காலையில் வெள்ளங்குழியில் உள்ள 7 குடிசை வீடுகள் மற்றும் அதே சாலையில் சேனங்கோடு பகுதி வரையுள்ள மேலும் 14 வீடுகள் என மொத்தம் 21 வீடுகளை அகற்றும் நடவடிக்கையை தொடங்கினர்.

அப்போது, தங்களுக்கு சரியான மாற்றிடம் வழங்காத நிலையில் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என கூறிக்கொண்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.

வருவாய்த்துறையினர் உத்தரவு

இந்த பரபரப்புக்கு இடையே வருவாய்த் துறை தரப்பில் இருந்து வீடுகளை அகற்றும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு நெடுஞ்சாலைத் துறையினருக்கு நேற்று காலையில் திடீர் உத்தரவு வந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் வீடுகளை அகற்றும் முடிவை கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சம்பவ இடத்தில் குடிசைவாசிகளுக்கு ஆதரவாக மாவட்டசேவாதளம் காங்கிரஸ் தலைவர் காஸ்ட்டன் கிளீட்டஸ், திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின்தாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மோகனன், சிவகுமார், சுரேஷ்குமார், தி.மு.க. தரப்பில் சதீஷ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.


Next Story