முட்டை விலை தொடர் சரிவு: பண்ணையாளர்களுக்கு ரூ.110 கோடி இழப்பு


முட்டை விலை தொடர் சரிவு:  பண்ணையாளர்களுக்கு ரூ.110 கோடி இழப்பு
x

முட்டை விலை தொடர் சரிவு: பண்ணையாளர்களுக்கு ரூ.110 கோடி இழப்பு

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.110 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

4½ கோடி முட்டைகள் உற்பத்தி

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவை தமிழக சத்துணவு திட்டத்துக்கும், கேரள மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும், உள்ளூர் தேவைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்கிறது.

கடந்த மாதம் 1-ந் தேதி 550 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை நேற்று முன்தினம் 4 ரூபாயாக சரிவடைந்தது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் முட்டை விலை 150 காசுகள் சரிவடைந்து இருப்பதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ரூ.110 கோடி நஷ்டம்

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு ஒரு விலையும், நெஸ்பேக் அமைப்பு மற்றொரு விலையும், வியாபாரிகள் ஒரு விலையும் என முட்டை விலை தாறுமாறாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

முட்டைக்கு சரியான விலை இல்லாததால், பண்ணையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். உற்பத்தி செலவை காட்டிலும் தினசரி ஒரு முட்டைக்கு ரூ.1 நஷ்டம் ஏற்படுகிறது. அதன் மூலம் தினசரி சுமார் ரூ.5 கோடி வீதம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.110 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

நுகர்வோர் பாதிப்பு

கொள்முதல் விலை 350 காசுகளாக இருக்கும்போது, வண்டி வாடகையுடன் சேர்த்து 450 காசுக்கு சில்லரை விற்பனை செய்யலாம். ஆனால் 500, 600 காசுகளுக்கு விற்பனை செய்கின்றனர். அதனால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு விற்பனை விலையை கொள்முதல் விலையாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்ய வேண்டும்.

அப்போது தான், பண்ணையாளர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். அதேபோல் வண்டி வாடகையையும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான், நுகர்வோருக்கு சரியான விலையில் முட்டை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story