ஈரோட்டில் கருமுட்டை விற்பனை விவகாரம்: பெண் புேராக்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி


ஈரோட்டில் கருமுட்டை விற்பனை விவகாரம்:  பெண் புேராக்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x

பெண் புேராக்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி

ஈரோடு

ஈரோட்டில் நடந்த கருமுட்டை விற்பனையில் பெண் புரோக்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

கருமுட்டை விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மருத்துவமனைகளில் கருமுட்டை தானம் என்ற பெயரில் முறைகேடாக 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை விற்பனை நடந்ததாக புகார் வந்தது.

ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறுமியின் தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி என்ற பெண் மற்றும் சிறுமியின் வயதை அதிகரித்து போலி ஆதார் அட்டை தயாரித்து வழங்கிய ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறப்புக்குழு விசாரணை

மேலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமியின் கருமுட்டையை தானம் என்ற பெயரில் முறைகேடாக ஈரோடு, பெருந்துறை மட்டுமின்றி, சேலம், ஓசூர், திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளிலும் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து இந்த விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் மூலம் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக தலைவரும் இணை இயக்குனருமான (சட்டம்) டாக்டர் அ.விஸ்வநாதன் மற்றும் 4 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் ஈரோடு வந்து தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரணை நடத்தியதுடன், போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவரங்கள் கேட்டு அறிந்தனர்.

போலீஸ் காவலில் புரோக்கர்

இந்தநிலையில் கருமுட்டை விற்பனை தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்தும் வகையில் புரோக்கர் மாலதி, சிறுமியின் தாயார், தாயாரின் கணவர், போலி ஆதார் தயாரித்துக்கொடுத்த ஜான் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். இதுதொடர்பான மனு ஈரோடு மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனு ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.மாலதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி போலீசாரின் வேண்டுகோளை ஏற்று புரோக்கர் மாலதியை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். போலீசார் 5 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்ததுடன், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு அவரை கோர்ட்டில் ஒப்படைக்கவும் வேண்டும் என்று அந்த அனுமதி உத்தரவில் கூறி இருந்தார்.

அதைத்தொடர்ந்து மாலதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். மற்ற 3 பேருக்கும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.

விசாரணை தீவிரம்

இந்தநிலையில் சென்னையில் இருந்து மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக டாக்டர்கள் குழுவினர் நேற்று மீண்டும் ஈரோடு வந்தனர். அவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, அங்கு போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

புரோக்கர் மாலதியை விசாரிக்க கால அவகாசம் குறைவாக இருந்ததால் நேற்று மாலையே அவரிடம் விசாரணை தொடங்கியது. இதனால் சிறப்பு குழு போலீசார் இந்த விசாரணையில் தீவிரமாக இறங்கினார்கள். இன்று விசாரணை முடிந்தால் மட்டுமே கருமுட்டை விற்பனை குறித்த வேறு விஷயங்கள் தெரியவரும்.

மாலதி கூறும் வாக்குமூலத்தில் இருந்து தான் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story