ஈ.ஐ.டி. பாரி ஆலை பகுதியை சக்தி சர்க்கரை ஆலைக்கு மாற்றியதற்கு வரவேற்பு


ஈ.ஐ.டி. பாரி ஆலை பகுதியை சக்தி சர்க்கரை ஆலைக்கு மாற்றியதற்கு வரவேற்பு
x

ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை பகுதியை சக்தி சர்க்கரை ஆலைக்கு மாற்றியதற்கு வரவேற்பதாக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஈரோடு

ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை பகுதியை சக்தி சர்க்கரை ஆலைக்கு மாற்றியதற்கு வரவேற்பதாக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஆணையாளர் உத்தரவு

கரூர் மாவட்டம் புகழூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைக்கு, ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதி கரும்பை பதிவு செய்து, அரவைக்கு எடுத்து செல்கின்றனர். அதே தாலுகாவில் உள்ள சில பகுதி கரும்பு பதிவை, எழுமாத்தூரில் உள்ள சக்தி சர்க்கரை ஆலைக்கு மாற்றம் செய்து, சர்க்கரை துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு புகழூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையுடன், அறச்சலூர் உள்ளிட்ட பகுதி கரும்பை பதிவு செய்து, அரவைக்கு எடுத்து செல்ல வேண்டும். சக்தி சர்க்கரை ஆலைக்கு மாற்றுவதை நாங்கள் ஏற்க மாட்டோம். போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் நேற்று முன்தினம் கோரிக்கை மனுவும் வழங்கினர்.

கரும்பு அறுவடை

இந்த நிலையில் அறச்சலூர், மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் சிவகிரி பகுதி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஆர்.பி.ராஜா, செயலாளர் தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை, எங்கள் பகுதி கரும்பு அறுவடைக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்காமல் 17, 18 மாதங்களாகியும், கரும்பு முழுமையாக அறுவடை செய்யவில்லை. உரிய காலத்தில் கரும்பு அறுவடை செய்யாவிட்டால், கரும்பு பிழிதிறன் குறைந்து, விலை மற்றும் லாபம் குறையும்.

வரவேற்பு

இதுபற்றி, ஆலை நிர்வாகத்திடம் பேசியும் பயன் இல்லாததால், கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி, பாரி நிறுவனத்தின் அறச்சலூர் கரும்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். 12 மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய கரும்பை தாமதமாக அறுவடை செய்ததால் ஏக்கருக்கு 15 முதல் 20 டன் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

கரும்பு எந்திர அறுவடைக்கு உதவவில்லை. பணம் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதால், எங்களை வேறு கரும்பு ஆலைக்கு மாற்ற சர்க்கரை துறை ஆணையரிடம் முறையிட்டோம். எங்கள் பகுதியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பை எடுத்து செல்வது எளிதாகும். எனவே, எங்கள் பகுதியை சக்தி சர்க்கரை ஆலைக்கு மாற்றியதை வரவேற்று, கரும்பு பதிவுக்கு ஒத்துழைப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக அறச்சலூர், மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் சிவகிரி பகுதி கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.


Related Tags :
Next Story